thirumALigai Vaibhavam

ஸ்ரீ: 

ஸ்ரீமத்யை கோதாயை நம:                                                        ஸ்ரீமதே சடகோபாய நம: 

      ஸ்ரீமதே ராமானுஜாய நம:                                                          ஸ்ரீ முடும்பை பூர்ணாய நம: 

     ஸ்ரீமத் வரவர முனயே நம:                                                         ஸ்ரீமத் வரத குரவே நம: 

Nammazhwar வைகுண்டேது பரேலோகே ஸ்ரீஸஹாயோ ஜனார்த்தன: |

 உபாப்யாம் பூமி நீளாப்யாம் ஸேவித : பரமேஸ்வர: ||

ஸ்ரீய: பதியான ஸர்வேஸ்வரன், ஸம்ஸாரிகளை உஜ்ஜீவிக்கும் பொருட்டு, இப்பாரத தேசமெங்கும் பல்லாயிரக்கணக்கான ஊர்களிலே கோயில் கொண்டுள்ளான். இவற்றில் விசேஷமானவை, ஆழ்வார்களாலே பாடப்பெற்ற திவ்ய தேசிங்களாகும். நூற்றஇடுத் திருப்பதிகள் எனப்படும் இவற்றில் விசேஷமானவை கோவில், திருமலை, பெருமாள் கோவில் எனப்படும் மூன்றும் ஆகும். எல்லாவற்றிலும் ப்ரதானம் “கோவில்” எனப்படும் ஸ்ரீரங்கமே ஆகும். ஸ்ரீரங்கம் தான் ஸ்ரீவைஷ்ணவ ஸம்ப்ரதாயத்தின் ராஜதானி(தலைநகரம்) ஆகும். ஆகையால் தான் “ஸ்ரீமந்ஸ்ரீரங்கச்ரியம் அநுபத்ராவமநுதினம் ஸம்வர்த்தய” என்று தினமும் அநுஸந்திக்கிறோம்”. திருவரங்கம் திருப்பதியே இருப்பாகப் பெற்றோம்” என்று அங்கிருந்து கொண்டு தான் நம் ஆசார்யர்கள் நம் ஸம்ப்ரதாயத்தை வளர்த்து வந்தார்கள்.

சதுஸ்ஸப்ததி ஸிம்ஹாஸநாதிபதிகள்

ஓராண் வழியாக வந்த குருபரம்பரையின் நடுநாயகரத்னமான ஸ்ரீஉடையவர் (ராமாநுஜர்) ஒரு ஸமயம் வீரநாராயணபுரம் எழுந்தருளினார். அங்குள்ள பெரிய ஏரியின் 74 மதகுகள் வழியாகப் பாயும் நீரானது, சுற்றியுள்ள அத்தனை ப்ரதேசங்களையும் வளங்கொழிக்கச் செய்வதை பார்த்தார். “நம் ஸம்ப்ரதாயமும் இதே போல் செழித்தோங்கிப் பெருகி ஜனங்களை வாழ்விக்க வேணும்” என்று திருவுள்ளம் பற்றினார். ஆயிரக்கணக்கான தம் சிஷ்யர்களிலே 74 பேரைத் தேர்ந்தெடுத்தருளி “பாருலகில் ஆசையுடையோர்க்கெல்லாம் ஆரியர்காள் கூறும்” என்று உலகோர்க்குப் பஞ்சஸம்ஸ்கார பூர்வகமாக ஹிதத்தை உபதேசிக்கும்படி நியமித்தருளினார். இவர்களே சதுஸ்ஸப்ததி ஸிம்ஹாஸநாதிபதிகள் எனப்படுவர். இந்த ஆசார்யர்களின் திருவம்சத்தவர்களே “ஆசார்யபுருஷர்கள்” என்று அழைக்கப்படுகின்றனர்.

ஸ்ரீ முடும்பை நம்பி

காஞ்சிபுரத்துகருகில் முடும்பை என்னும் அக்ரஹாரத்தில் ஸ்ரீவத்ஸகோத்ரத்தில் அவதரிதவர் ஸ்ரீவரதாசாரியர் என்பவர். இவர் பால்யத்திலிருந்தே மஹாஞானியாகவும், ஆழ்வார்கள் அருளிச்செயல்களில் ஆழ்ந்த ஞானமும் ஈடுபாடும் உடையவராகவும், ப்ரஸித்தமான பண்டிதராகவும், உதாரராகவும், வாத்ஸல்யபரிபூர்ணராயும், தோஷமற்றவராகவும் இருந்தார். அத்தோடு அவர் ராமாநுஜரின் பஹ்னீபதியும்(ஸஹோதரியின் பர்த்தா) ஆவார். தேஹஸம்பந்தத்தோடு, மட்டுமல்லாது ஆத்மஸம்பந்தமும் வேணுமென்று உடையவர் திருவடிகளில் ஆச்ரயித்தவர். யதிராஜரின் திருவடித்தாமரைகளிலேயே சுற்றி வரும் வண்டு போன்றவர். கூரத்தாழ்வானின் ப்ரியத்துக்குப் பாத்ரமானவர். கெளரவம் தோற்ற “முடும்பை நம்பி” என்றே எல்லோராலும் அழைக்கப்பட்டார். இவற்றை

“ஸ்ரீ ராமாநுஜ ஸம்யதீந்த்ரசரணம் ஸ்ரீவத்ஸ சிஹ்ன ப்ரியம்,

ஸேவேஹம் வரதார்ய நாமகமமும் ஸூக்த்யா ப்ரஸித்தம் முதா |

பால்யாத் பரிபூர்ண போத சடஜித் காதாநுராகோஜ்வலம்,

வாத்ஸ்யம் பூர்ண முதாரம் ஆச்ரிதநிதிம் வாத்ஸல்ய ரத்னாகரம் ||

ஸ்ரீராமாநுஜ யோகீந்த்ர பதபங்கஜ ஷட்பதம் |

முடும்பை பூர்ணமநகம் வந்தே வரதஸம்க்ஞகம் ||”

என்று இவரது தனியன்களிலிருந்து அறியலாம். 74 ஸிம்ஹாஸநாதிபதிகளில் ஸ்ரீமுடும்பை நம்பியும் ஒருவராவார். இவர் குமாரர் ஸ்ரீராமாநுஜ நம்பி. முதலியாண்டான் போலே எம்பெருமானார்க்கு ராமாநுஜ நம்பியும் பாகிநேயர் (மருமான்) ஆவார். இவர் தனியன்

“பாஷ்யக்ருத் பாகிநேயோசஸெள பவசந்தாப சாந்தயே |

வரதார்யாத்மஜோஸ்மாகம் பூயாத் ராமாநுஜாஹ்வய: ||”

இவர் குமாரர் ஸ்ரீ முடும்பையாண்டான் (தாசரதி). இவர் முடும்பையிலிருந்து ஸ்ரீரங்கத்துக்குக் குடிபெயர்ந்தருளினார் என்பதை “ஸ்ரீரங்கவாஸப்ரியம்” என்ற இவர் தனியனிலிருந்து அறியலாம். இவர் குமாரர் தேவப்பெருமள் என்னும் வரதார்யர். இவர் குமாரர் இளையாழ்வார் என்னும் லக்ஷ்மணாசாரியார்.

mudumbai-nambi-to-AththAn-swamyமுடும்பை நம்பி வம்ச பரம்பரை படம் உதவி கோயிலாத்தான் கஸ்தூரிரங்கன் ஸ்வாமி

ஸ்ரீபிள்ளை லோகாசாரியார்

beaming_sri_pillai_lokacharya_after_receiving_udyavar_prasadam

இளையாழ்வாரின் குமாரர்களில் ஒருவர் ஸ்ரீக்ருஷ்ணபாதகுரு. இவர் நம்பிள்ளையின் காலக்ஷேப கோஷ்டியில் ப்ரதமச்ரோதாக்களாயிருந்த இரு க்ருஷ்ணமாசாரியர்களில் ஒருவர். “வடக்குட் திருவீதிப்பிள்ளை” என்றே ப்ரஸித்தர். “இந்த நாடறியமாறன் மறைப்பொருளை நன்குரைத்த” ஈடுமுப்பதாறாயிரப்படியை ப்ரஸாதித்தவர். திருவாய்மொழியைக் காத்த குணவாளர். “ஆசார்ய ஸம்மதி” என்ற க்ரந்தமும் அருளிச்செய்தார். இவரது குமாரர்கள் இருவர் ஜ்யேஷ்டர் ஸ்ரீபிள்ளை லோகாசாரியார். ஸுப்ரஸித்திபெற்ற அஷ்டாதச ரஹஸ்யங்களை அருளிச்செய்து ப்ரமாணங்களைக் காத்ததோடு, துருஷ்கக் கலாபத்தில் நம்பெருமாளை ஸ்ரீரங்கத்தினின்றும் எழுந்தருளப்பண்ணி, ப்ரமேயத்தையும் காத்தருளினவர். அவர் திருத்தம்பியார் அழகியமணவாளப் பெருமாள் நாயனார். திருப்பாவை ஆறாயிரப்படி, திருவிருத்தம் ஆறாயிரப்படி, திருப்பல்லாண்டு வ்யாக்யாந்ங்கள், ஆசார்யஹ்ருதயம், அருளிச்செய்தவர். இவ்விருவரும் நைஷ்டிக ப்ரம்மசாரிகளாயிருந்து விட்டனர். இளையாழ்வாரின் மற்றொரு குமாரர் வரதாசாரியார். இவர் குமாரர் ராமாநுஜகுரு. இவர் குமாரர் அழகப்பங்கார். இவர் குமாரர் பேரருளாள ஸ்வாமி (தேவராஜ குரு). இவர் குமாரர் ராமாநுஜம் பிள்ளை.

மணவாளமாமுனி ஸம்பந்தம்

நம்பெருமாள் நியமனப்படி கோயில் பெரிய திருமண்டபத்திலே, நம்பெருமாள் திருமுன்பே ஈடு முப்பத்தாறாயிரப்படி காலஷேபம் செய்து “ஈடு முப்பத்தாறாயிரப் பெருக்கர்” என்ற அபிதானத்தையும், “ஸ்ரீசைலேசதயாபாத்ரம்” தனியனையும் அடைந்த ஸ்ரீமந்மணவாளமாமுனிகளின் காலஷேப கோஷ்டி மிகவும் ப்ரஸித்தமாக இருந்தது. விசதவாக் சிகாமணியான அவருடைய கோஷ்டியில் அந்வயித்த முதலிகளில் ராமாநுஜம் பிள்ளையும் ஒருவர். ராமாநுஜம் பிள்ளையும், மாமுனிக்குப் பாதரேகை ஸ்தானத்தராயிருந்த ராமாநுஜ ஜீயரும்(வானமாமலை) ஒருவருக்கு ஒருவர் அத்யந்தப்ரியதமராயிருந்தனர். “நமக்குண்டான அதிசயங்கள் எல்லாம் இவர்க்கும்(வானமாமலை ஜீயருக்கும்) உண்டாக வேணும்” என்ற மாமுனிகள் நியமனத்தை “வேலேவ ஸாகரம்” போலே அதிக்ரமியாது வானமாமலை ஜீயருக்கு ப்ரிய ஸுஹ்ருத்தாக ராமாநுஜம் பிள்ளை இருந்தார். அவரிடம் பகவத் விஷயகாலஷேபமும் பண்ணினார்.

mamuni-azhwarthirunagari

பெரிய ஜீயர் பரமபதம் அடைதல்

பெரிய ஜீயருக்கு வார்த்திகத்தோடு நோயும் வந்து அநுவர்த்திக்க, “நோயே மூப்பு பிறப்பு இறப்பு பிணியே என்றிவையொழியக் கூயேகொள் அடியேனை” என்று “அந்தோ! எதிராசா நோய்களால் என்னை நலுக்காமல், சதிராக நிந்திருத்தாள்தா” என்று தமதார்த்தியெல்லாம் தோற்றக் கூப்பிட்டு சரிராவஸநாஸமயம் வந்தவாறே தம்மை ஆச்ரயித்திருந்த முதலிகள் பலரையும் ஓரோர் திவ்யதேசங்களுக்கு சென்று எம்பெருமான் கைங்கர்யங்களை நடத்திவரும்படி நியமித்தருளினார். ஸ்வதேசமான திருநகரியில் ஸ்வாமி ஆழ்வார்திருவடிகளிலே திருவுள்ளம் குடிபோய் “ஸ்வாமி ஆழ்வார் கைங்கர்யங்களைக் குறைவின்றிச் செய்யவல்லார் ஆர்” என ஆராய்ந்து, ராமாநுஜம்பிள்ளையும் அவர் குமாரர் ஆத்தானை (வரதாசாரியாரை)யும் அழைத்து தாம் ஆதரத்துடன் ஆராதனம் செய்து போந்த பேரருளாளனையும், அருளி, “நீங்கள் திருநகரி சென்று ஸ்ரீ ஆதிப்பிரானையும் ஸ்ரீசடகோபரையும் நமக்காகத் துஞ்சும் போதும் விடாது அநுவர்த்தித்துத் திருவாய்மொழியையும் வளர்த்துக் கொண்டு போருங்கோள்” என்று நியமித்தார். ஜீயர் திருநாடலங்கரித்தருளினவாறே முதலிகளெல்லோரும் ஸ்ரீசூர்ணபரிபாலநந் தொடங்கி இயல் சாத்து வரை எல்லாக் கைங்கர்யங்களையும் ஸம்ப்ரமமாக நடத்தினார்கள்.

ஸ்ரீ ராமாநுஜம் பிள்ளை திருநகரி எழுந்தருள்தல்

பெரிய ஜீயரின் பரமபதப்ராப்தியாலும், வானமாமலை ஜீயரும் (பத்ரிகாச்ரமயாத்திரை) அருகிலில்லாமையாலும், போரக்லேசத்தோடே எழுந்தருளியிருந்த ராமாநுஜம் பிள்ளைக்கு ஓரிரவில் ஸ்வாமி ஆழ்வார் “உடனே திருநகரியேற வந்து சேரும்படி” ஸ்வப்ன முகேந நியமித்தருளினார். மாமுனிகள் நியமனமும், மகிழ்மாறன் நியமனமும் பிள்ளையைத் தெளிவிக்கத் தெளிந்து ஹ்ருஷ்டராய், நம்பெருமாளிடம் விடை கொண்டு, கோயிலிலுள்ள தம் ஸகலஐஸ்வர்யங்களையும் அங்கேயே விட்டு, “ஸபுத்ரபெளத்ரஸ்ஸகண:” என்றபடி குடும்பத்துடனும் சிஷ்யர்களுடனும் திருநகரி நோக்கி விடை கொண்டார். இதறிந்த வழியிலுள்ள ஸ்ரீவைஷ்ணவர்கள் பலரும், “லக்ஷ்மணோ லக்ஷ்மி ஸம்பந்ந:” என்றாற்போலே ஆழ்வார் கைங்கரிய ஸ்ரீயோடு எழுந்தருளும் உத்தமமாம் முடும்பைக் குலம் உதித்த பிரானை ஆதரித்தும் ஸேவித்தும் சிஷ்யர்களாகியும் பின் தொடர்ந்தனர். இப்படி மஹாவைபவத்தோடே திருநகரியை அடைந்து திருப்பொருநலில் திருச்சங்கணித்துறையில் நீராடி, ஸ்வாமி ஆழ்வாரும் போரத்திருவுள்ளமுகந்து, தமது சத்ர, சாமர. தண்ட, தீப மேள தாள வாத்ய ந்ருத்யங்களான ஸகலவரிசைகலோடு, பரிவட்டம், மாலை, தீர்த்தம், சுருள், சந்தனம், அபயஹஸ்தம், திருத்துழாய், புஷ்ப ப்ரஸாதங்கள் அனுப்பி எதிர் கொண்டழைத்துக் கொண்டார். பிள்ளையும், ஆதிப்பிரானையும், திருப்புளியின் அடியில் உறையும் ஞானதேசிகனையும் ஸேவித்து அளப்பரிய ஆனந்தமடைந்தார். ஸ்வாமி ஆழ்வாரையும் போரவுகந்தருளி, அர்ச்சகமுகேந “சடகோபாசாரியார்” என்று அருளிப்பாடிட்டு “நம் கோவில் பரிகரமனைத்துக் கொத்தும் நிர்வஹித்து வாரும்” என்று நியமித்தருளி நித்யம் ஸாயரக்ஷை நித்யாநுஸந்தான காலத்தில் (ஸ்வாமி ஆழ்வார்) தாம் அமுது செய்தருளுகிற ப்ரஸாதம், நெய், கீரையமுது, உப்புச் சாற்றமுது ஆகிய தளிகை ப்ரஸாதத்தையும் பிள்ளைக்கு பஹுமானமாகத் தந்தருளினார். அது முதல் ராமானுஜம்பிள்ளையும் “சடகோபாசாரியார்” என்ற தன்னேற்ற அருளிப்பாட்டையும் “கோவில் பரிகரமனைத்துக் கொத்தும்” என்ற கொத்தருளிப்பாட்டையும் பெற்றார்.

 திருநகரியில் நித்யவாஸம்

“ஸ்ரீநகர்யாம் மஹாபுர்யாம் தாம்ப்ரபர்ண்யுத்தரேதடே” என்கிறபடியே திருநகரியில் ததிருத்தாம்ப்ர பர்ணியின் ச்லாக்யமான(சிறந்த, உயர்ந்த) கரையாகிய தெங்கரையிலே, வடக்குத் திருவீதிப் பிள்ளையின் வம்சத்தவராகையாலே ஸ்வாமி ஆழ்வாரின் வடக்குத் திருவீதியிலே தமக்குத் திருமாளிகை அமைத்துக் கொண்டு தம் திருவாராதனப் பெருமாள்களை ஆராதித்துக் கொண்டு வரவரமுனி திவ்யாக்ஞைப்படி ஆதிநாதர், ஆழ்வாரின் நித்ய, பக்ஷ, மாஸ, அயந, ஸம்வத்ஸரோத்ஸவங்களெல்லாம் ஒன்றால் ஒன்றும் குறைவின்றி, கோயில் பரிகரமனைத்துக் கொத்தும் நிர்வஹித்து நடத்திவந்தார். ஆழ்வார் கைங்கர்யத்தோடு, அவர் திருவுள்ளம்(மேலும்) உகக்கும்படி அவராலே தந்தை, தாயாக அடையப்பட்ட திருத்தொலைவில்லிமங்கலத்து எம்பெருமான்கள், திருக்குளந்தை, திருக்கோளுர் எம்பெருமான்கள் “ஆழ்வாரையன்றி தேவுமற்றறியாத” மதுரகவியாழ்வார் கைங்கர்யங்களையும் நிர்வஹித்து நடத்தி வந்தார்.

பிள்ளை அருளிச் செய்தவை

ராமாநுஜம் பிள்ளை கந்தாடை நாயனுக்கு ஸாதிக்க, கந்தாடைநாயனும் திருவாய்மொழிக்கு ஸம்ஸ்க்ருத அரும்பதம் அருளிச்செய்தார். பகவத்விஷய அரும்பதத்தில் “பிள்ளை நிர்வாஹம்” என்று சில இடங்களில் ராமாநுஜம் பிள்ளையின் நிர்வாஹங்கள் காட்டப்பட்டுள்ளன.

athan-swami

ஸ்ரீ ஆத்தான் ஸ்வாமி

ராமாநுஜம் பிள்ளையின் திருக்குமாரர் வரதாசாரியார். இவர் பால்யத்தில் திருத்தகப்பனாரோடு ஸ்ரீரங்கத்தில் மாமுனி கோஷ்டியில் அந்வயித்தவர். வானமாமலை ஜீயரின் அத்யந்தப்ரிய பாத்ரராயும், அவர் திருவடிகளில் ஆரா அன்புடையவராயும் இருந்தார். ஜ்ஞாநாநுஷ்டாநங்களில் மிக்கும், அருளிச் செயல்களில் ஆழ்ந்த ஞானத்தோடு ஈடுபாடும் உடையவராய், அதிமேதாவியாய் இருந்தார். திருநகரிக்கெழுந்தருளிய சில வருஷங்களிலேயே ராமாநுஜம் பிள்ளை பரமபதித்து விட்டார். “ஆத்தான்” என்றே ப்ரஸித்தராயிருந்த வரதாசாரியார், ஸ்வாமி ஆழ்வார் கைங்கர்யதுரந்தரராய், கோயில் பரிகரம் அனைத்துக் கொத்தும் நிர்வஹித்து, நித்ய நைமித்திக்கோத்ஸவங்களைக் குறைவின்றி நடத்தி வந்தார். ஆதிநாதருக்குப் பங்குனி உத்திரத்திருக்கல்யாணோத்ஸவத்தையும் ஏற்படுத்தி பங்குனித்திருத்தேரையும் செய்து ஸமர்ப்பித்து நடத்தி வைத்தார். ஆழ்வாருக்கு நிரவதிகமான ஸம்பத் சேகரித்தும், திருப்பீதாம்பரங்கள், திருவாபரணங்கள், திருப்பல்லக்குகள் முதலானவை செய்து ஸமர்ப்பித்து நடத்தி வந்தார்.

ஆத்தாநிதீஹ விதிதோ வரதார்ய சர்மா |

காரீந்த்ரஸுநு க்ருதி ஸாகர பூர்ண சந்த்ர : ||

என்கிறபடியே வரதகுருவும் “ஆத்தான்” என்றே ப்ரஸித்தராய், அருளிச்செயல்களுக்கு ப்ரவசநக்ரமத்தில் அத்யந்தம் அபிவ்ருத்திகரராய் “பகவத்விஷயம் வரதாசாரியார்” என்றே ப்ரஸித்தராய், தர்சந நிர்வாஹமும், ஆழ்வார் கைங்கர்ய நிர்வாஹமும் செய்து கொண்டு மஹாப்ரபாவத்தோடே எழுந்தருளியிருந்தார்.

இவர் அருளிச் செய்தவை

“பகவத் விஷயம் வரதாசாரியார்” என்றே நிரூபகமாம் படியிறே, பகவத் விஷயத்தில் அவகாஹநம் இருந்தபடி, திருநகரியில் திருப்புளியாழ்வாரடியில் மணவாள மாமுனி திருவடிக்கீழ் பகவத் விஷயம் ஸாதித்தருளினார். குன்றத்தூர் அப்பனுக்கு பகவத் விஷயம் ஸாதிக்க, அவரும் திருவாய்மொழிக்கு, அரும்பதம் அருளிச்செய்தார். இவர் திருவடிகளில் ஆச்ரயித்த வேதாந்திராமாநுஜ ஜீயரும் “திவ்யஸூரிப்ரபாவதீபிகை” முதலானது அருளிச்செய்தார்.

ஸ்ரீ ஞானத்ருஷ்டி அழகப்பங்கார் ஸ்வாமி

ஸ்ரீ வாநசைல முனிராஜ பதாப்ஜ ஸங்காத்

ராமாநுஜார்ய தநயஸ் ஸுதராம்பபாஸே

என்றும் “தஸ்யாபூத் தநயோ லோகவிச்ருதஸ் ஸுந்தராஹ்வய: யதாத்மநாவதீர்ணோத்ர வாநசைலேச ஸுந்தர: ||” என்கிற படியே வரதார்யரிடத்திலே(ஆத்தான் ஸ்வாமி) வானமாமலைப்பெருமாள் போரவுகந்தருளி, அவருக்குத்தாமே திருக்குமாரராய் அவதரித்தருளினார். ஸுந்தராசாரியார் என்ற திருநாமமுடைய இவர் திகந்த விச்ராந்த ப்ரஸித்தி பெற்று வாழ்ந்தருளினார். இவர் ப்ரஸித்தி இருந்தபடி என்என்னில் “யச்சிஷ்யபாவமநவாப்ய சடாரிவேதபாவம் ப்ரபோத்துமநலம் பஹுசாஸ்த்ர வித்பி|| ஸோயம்ஹி ஸுந்தரகுருர் விஜயத்வஜோபூத் ஸித்தாந்த ஸீம்னி யதிராஜகுரோர் மஹாத்மா||

ஸகலசாஸ்த்ர நிபுணர்களான மஹாவித்வான்களும் கூட இவர் ஸம்பந்தம் பெற்றாலொழிய ஆழ்வார் அருளிச் செயல் வ்யாக்யாநபோத முண்டாவது அரிது என்று நினைக்கும் படியாயும், ராமாநுஜஸித்தாந்தத்தின் எல்லைக்கு விஜயத்வஜபூதராயும், “ஞாநத்ருஷ்டி அழகப்பங்கார்” என்றே ஸகலரும் கொண்டாடும்படி மஹாப்ரபாவமுடையவராயுமிருந்தார்.

இவர் அருளிச்செய்தவை

ஸாரார்த்த மாலை, ஈட்டுக்குப் பாட்டுத்தோறும் உபந்யாஸம், நூறு திருவாய்மொழிக்கும் உபந்யாஸம், பத்து பத்துக்கும் உபந்யாஸம், உபோத்காதோபந்யாஸம், நிகமந உபந்யாஸம், ஈட்டு ப்ரமாணத்திரட்டுக்கு உரை, திருப்பாவை தாத்பர்யம், திருப்பாவை கருத்து, திருமந்த்ரயோஜனை, த்வயயோஜனை உபந்யாஸம், மூவாயிரத்துக்கும் ப்ரமாணத்திரட்டு, ரஹஸ்யத்ரய, ஸ்ரீவசந பூஷண, ஆசார்யஹ்ருதய ப்ரமாணத்திரட்டு முதலானதுகள் அருளிச்செய்தார்.

இவர் அருளிச்செய்யக் கேட்டு, கேட்டபடியே அப்பு முதலானோர் அரும்பதம் அருளிச்செய்தார். அப்பு அரும்பதம், பிள்ளை அரும்பதம், அய்யங்கார் அரும்பதம், ராமாநுஜய்யங்கார் அரும்பதம், தொட்டையரும்பதம் போன்ற அரும்பதங்களும் உண்டாயின. அப்புவும், பிள்ளையும் மூவாயிரத்துக்கும் அரும்பதங்களும், தத்வத்ரய, ரஹஸ்யத்ரய, ஸ்ரீவசநபூஷண, ஆசார்யஹ்ருதய அரும்பதங்களும், உபந்யாஸங்களும், பரந்த படிக்கும் கடினவாக்யார்த்தம், தீபப்ரகாசிகையரும்பதமும் அருளிச்செய்தனர். ஆக இப்படி ஞாநத்ருஷ்டி அழகப்பங்கார் காலம் “அரும்பதகாலம்” என்னலாம் படியிறே நடத்தி வந்தார்.

ஞாநத்ருஷ்டி அழகப்பங்கார் குமாரர்(பெரிய) சடகோபாசாரியார். இவர், திருத்தகப்பனாரிடம் காலக்ஷேபங்கள் கேட்டு அருளிச்செயல்களின் ஆழ்பொருள்களைத் தேர்ந்துரைத்தும், “ஈடுப்ராஸங்கிக ப்ரமாணத்திரட்டும்” அருளிச்செய்தார். பேரருளாளரிடம் பேசும் படியான ஏற்றம் பெற்ற ஸ்ரீதிருக்கச்சிநம்பியிடம் அபார ஈடுபாடுடையவராய் “திருக்கச்சிநம்பி சரிதம்” முதலானது அருளிச்செய்தார். “ராமாநுஜமுநேர் மான்யம்” என்று உடையவராலே மிகவும் போற்றப்பட்ட திருக்கச்சிநம்பிக்கு திருநகரியிலே உடையவரின் “ராமாநுஜ சதுர்வேதி மங்கலத்திலே” ஸந்நிதி வீதியிலே ஒரு ஸந்நிதியும் கட்டி ப்ரதிஷ்டிப்பித்து, உடையவரை ஆனந்திப்பித்தார். அப்போதிலிருந்து திருக்கச்சிநம்பிக்கு ஸ்வாமி ஆழ்வார் மங்களாசாஸனமும் ஏற்பட்டு நடந்து வருகின்றது.

இவர் குமாரர் குமாரசாடகோபாசாரியாருக்கு ஐந்து குமாரர்கள். ஜ்யேஷ்டர் அழகப்பிரானார்க்கு ஸந்ததியில்லை. அவர்காலத்துக்குப் பின்பு, தம்பிகள் நால்வரும் “உலகமேத்தும் தென்னானாய், வடவானாய், குடபாலானாய், குணபாலமதயானாய்” என்றாற்போலே நான்கு திருமாளிகைகள் ஏற்படுத்திக் கொண்டு ஸ்வாமி ஆழ்வார் கைங்கர்யம் மற்றும் எம்பெருமான்கள் கைங்கர்யங்களையும் முறை வைத்து நிர்வஹித்துக் கொண்டு இன்றளவும் நடத்தி வருகின்றனர்.

ஸ்ரீமத் ஆத்தான் கீழத்திருமாளிகை ஸ்தாபிதம்

குமாரசடகோபாசாரியாருக்கு 5 குமாரர்கள்

  1. அழகப்பிரானார் – ஸந்ததியில்லை
  2. சடகோபாசாரியார் – கீழ(நமது) திருமாளிகை ஸ்தாபகர்
  3. ஸுந்தராசாரியார் – மேலத்திருமாளிகை ஸ்தாபகர்
  4. கெளஸ்துபாசாரியார் (எ) ராமாநுஜம் பிள்ளை – வடக்குத் திருமாளிகை ஸ்தாபகர்
  5. அப்பு வாசாரியார் – தெற்குத் திருமாளிகை ஸ்தாபகர்

தெற்குத் திருமாளிகை தற்போது ஸந்ததியின்றிப் போயிற்று. மீதி மூன்றில் நமது திருமாளிகை கீழத்திருமாளிகை. நால்வரில் ஜ்யேஷ்டராயிருந்த சடகோபாசாரியார் ஸ்வாமி ப்ராசீனமான(ஆதி) கீழத்திருமாளிகையில் எழுந்தருளியிருந்தார். ஒன்றான ராமாநுஜம் பிள்ளை இவ்வூருக்கு எழுந்தருளி அமைத்துக் கொண்டது இத்திருமாளிகை. பேரருளாளப் பெருமாள் இங்குதான் எழுந்தருளியிருந்து நித்யததீயாராதநாதிசயங்கள் அனைத்தழகும் கண்டருளுகிறார்.

சடகோபாசாரியார் ஞானாநுஷ்டானங்களில் மிக்கு, ஸ்வாமி ஆழ்வாரின் மறு அவதாரமோ என்னலாம்படி “வ்ருஷமாஸி விசாகாயாம் அவதீர்ணம் குணோஜ்வலம்” என்று வைகாசி விசாகத்திலே வந்தவதரித்து ஸ்வாமி ஆழ்வார் கைங்கர்யங்களைக் குறைவின்றி நடத்தி வந்தார். இவர் குமாரர் ராகவாசாரியார்……. என்று வம்சபரம்பரை தொடர்ந்து வருகின்றது.

3 thoughts on “thirumALigai Vaibhavam

  1. Sreedevi Srinivasan

    Achariyan thiruvadigale saranam. Very useful information. This will be a great step to the younger generation for bringing in Bhakti and Gnana of Thirumaligai and Achariyan Vaibhavam. My prayers for all success in this effort.

    Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *